raji an ancient epic review | ராஜி ஒரு பண்டைய காவியம்

  Raji an ancient epic review:

    பொதுவாக, நம்முடைய இந்திய புராணங்கள் மற்றும் அதனுடைய சிறப்புகள் போன்றவற்றை நாம் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதே வழக்கம். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் புத்தகம் பரிணாம வளர்ச்சி அடைந்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நமக்கு புராணங்களை கற்பிக்கிறது. 


  எனவே, இந்தப் பதிவில் நம்முடைய இந்திய புராணக் கதைகளை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "ராஜி" என்று பெயர் பெற்றிருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!

ராஜி ஒரு பண்டைய காவியம்: (raji an ancient epic)

    ராஜி எனப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 15, 2020 ஆம் தேதி பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தின் மூலம் வெளியிடப்பட்டது. 13 பேர் கொண்ட குழுவை வைத்து நாடிங் ஹெட்ஸ் கேம்ஸ் (Nodding heads games) எனப்படும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நிறுவனம் இந்த ஆன்லைன் விளையாட்டை தயாரித்துள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டானது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 


   இந்திய புராணக் கதைகள், கண்ணைக் கவரும் காட்சி மற்றும் சித்திர வடிவில் உருவாகியிருப்பதால் இந்தியாவில் இது சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளையாட்டானது காட் ஆஃப் வார் (God of war), டேல் ஆஃப் 2 சன்ஸ்(A tale of two sons) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த விளையாட்டின் நேரமானது நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. அதில் 15 நிமிடங்கள் நம்முடைய புராணக் கதைகளை பற்றிக் கூறியுள்ளனர். மேலும் நம்முடைய தலைசிறந்த புராணங்களாான இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டின் கலவை போன்ற ஒரு கதையை வடிவமைத்துள்ளனர்.


கதை விளக்கம்: 

   இந்த விளையாட்டின் கதாநாயகியாக ராஜி என்ற இளம் வயது பெண்ணும், முக்கிய கதாபாத்திரமாக கோலு என்று பெயர் பெற்ற அப்பெண்ணின் சகோதரனும் அமைந்துள்ளனர். இவர்கள் இருவரும் புராணம் சார்ந்த நாடகங்கள் நிகழ்த்துவதில் வல்லமை பெற்றவர்கள். அவ்வாறு ஒருமுறை நாடகம் நடத்தும் போது, கோலு கதையை சொல்ல, ராஜி அதை செயல் வடிவில் நிகழ்த்திக் கொண்டிருந்தாள். அந்தக் கதையில், "மகாபாலசூரன்" என்னும் அரக்கன் பல வருடங்கள் தவமிருந்து புத்தரிடம் இரு அற்புதமான வரங்களைப் பெறுகிறான்.


    முதலாவதாகச் சாகா வரத்தையும், இரண்டாவதாக அதீத சக்தி கொண்ட ஆயுதத்தையும் வரமாகப் பெறுகிறான். அதன் பின்பு ஒரு அரக்கர் கூட்டத்தை திரட்டிக் கொண்டு மக்கள் மீது போர் தொடுக்கச் செல்கிறான். அப்போது பூமாதேவி அவனை தடுக்க முயன்ற போது, அவன் சக்தியைக் கொண்டு தேவியை அழித்து விடுகிறான். இதைக் கண்டு கடும் சினம் கொண்ட சிவபெருமான் அந்த அரக்கனை தரையோடு தரையாக சேர்த்து மிதித்து விடுகிறார்.

   

    இவ்வாறு கதையை கோலு விளக்கும்போது திடீரென உண்மையான  அரக்கர் கூட்டம் அந்த ஊருக்குள் நுழைந்து அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கோலுவை ஒரு அரக்கன் தூக்கிச் சென்று விடுகிறான். அதைப் பார்த்த அதிர்ச்சியில் ராஜி மயங்கி கீழே விழுகிறாள். அங்குதான் கதை முடிந்து விளையாட்டு தொடங்குகிறது.


    ராஜி விழிக்கும்போது துர்காதேவி அவளிடம் அரக்கனை அழிக்கும் வேலையை ஒப்படைக்கிறார். ராஜியும் தன் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் துர்கா தேவியின் கட்டளையை ஏற்று தம்பியைத் தேடி ஓடுகிறாள். அவ்வாறு ஓடும்போது ராஜி துர்கா தேவியின் ஒரு சிலையை சென்றடைகிறாள். அங்கு, துர்க்காதேவி ராஜியிடம் சிவன் அருளிய திரிசூலத்தை ஆயுதமாக நல்குகிறார். 


   மேலும் அவளிடம் மகாபாலசூரன் என்னும் அரக்கன் அனைத்து தேவர்களையும் எளிதில் அளித்து விடுகிறான். அவனை எந்த தேவர்களாலும் வீழ்த்த முடியவில்லை. எனவே விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய மூவரின் ஆயுத சக்தியும் உன் திரிசூலத்தில் உள்ளது. இதைக் கொண்டு அரக்கர்களை அளிக்குமாறு துர்கா தேவி கட்டளையிடுகிறார். அதன் பின் எவ்வாறு அதைக்கொண்டு ராஜி அரக்கர்களை அழித்து தன் தம்பியை மீட்கிறார் என்பதுதான் இந்த விளையாட்டின் கதையாகும்.


விளையாட்டின் வடிவமைப்பு:

  இந்தக் கதையின் சித்திரம் மற்றும் இட வடிவமைப்பு பண்டைக்கால சாயலில் அமைந்துள்ளது. சுற்றியும் நிறைய சுவர் சித்திரங்கள் மற்றும் புராண நிகழ்வுகளை கூறும் சித்திரங்கள் அமைந்துள்ளது. மேலும் இந்த விளையாட்டில் இடையிடையில் கூறப்பட்டுள்ள கதைகள் அனைத்தும் பொம்மலாட்ட வடிவில் அமைந்துள்ளதால், தனித்துவத்தை நன்றாகவே வெளிக்காட்டுகிறது.  இந்த விளையாட்டின் பின்னணி இசையானது நம்முடைய இந்து மதத்தின் பாடல்களை நினைவூட்டும் வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.


   நான் வழக்கமாக என்னுடைய பதிவுகளில் ஆன்லைன்  விளையாட்டுகளைப் பற்றிக் கூறியதில்லை. ஆனால், நம்முடைய இந்திய புராணங்களை நன்றாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும், இதுபோன்ற விளையாட்டை பற்றிய என்னுடைய கருத்தைக் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 


   இது போன்ற விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடும் போது, பொழுது போவது மட்டுமின்றி, நம் புராணக் கதைகளைப் பற்றி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. இந்த விளையாட்டானது இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் மொழியிலும் வெளிவந்திருந்தால் இது மேலும் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும்.

  

   இந்த "ராஜி" என்னும் ஆன்லைன் விளையாட்டின் (raji an ancient epic) சிறிது நேரப் பகுதி கொண்ட காணொளியை நீங்கள் காண விரும்பினால் இந்த சுட்டியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்👇

  https://youtu.be/DQPIV9Ov1MQ

   என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு புராணம் சார்ந்த சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

பின்குறிப்பு: மேற்கூறப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிறுவனத்திற்கும் என்னுடைய இந்த வலைப்பதிவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட வியாபார நோக்கமும் இல்லை. இவையாவும் என்னுடைய சுய கருத்துக்களே!

                                       நன்றி!


  

  

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்