மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

  வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நான் உங்களை 725 வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறேன். ஆம்! நாம் 1295 ஆம் கால கட்டத்திற்குச் செல்லப் போகிறோம். 1295 ஆம் ஆண்டு மார்க்கோ போலோ என்னும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த  ஆய்வுப் பணியாளர் ஆசியக் கண்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது நம் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட தமிழகத்தையும் அவர் சுற்றினார்.

  அந்தக் காலகட்டத்தில் தமிழகம் எவ்வாறு செல்வ செழிப்புடனும், அழகுடனும் விளங்கியது என்பதை "மார்க்கோபோலோவின் பயணங்கள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் தமிழ்ப் பயணக் குறிப்புகளை பற்றி இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!

பழக்கவழக்கங்கள்:

   1280 ஆம் காலகட்டத்தில் குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன்,
தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். அப்போது அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் அமர்வதற்கும், உணவு உண்பதற்கும் தரையையே பயன்படுத்தினர். தமிழ் மக்கள் அனைவரும் மண்ணை தங்கள் தாய்க்கு நிகராக நேசித்து வாழ்ந்தனர். மேலும் நோய்த் தொற்றுகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வீட்டைச் சுற்றி மாட்டுச் சாணத்தை தெளித்தனர்.

   நம் தமிழர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மிக முக்கியமாகக் கருதினர். குவளையில் நீர் பருகும் போது எச்சில் படாதவாறு தான் பருகுவர். அன்றெல்லாம், சுத்தத்தை பின்பற்றாமல் வாழ்பவர்களே எப்போதும் இழிவான சாதியினராய்க் கருதப்பட்டனர். முகம் தெரியாதவர்கள் அல்லது சுத்த மற்றவர்கள் தண்ணீர் கேட்டால், குவளையை கையில் கொடுக்காமல், அவர்களின் இரு கைகளையும் கூப்பி நீரை ஊற்றிப் பருகச் சொல்வராம். 

  மேலும் அந்தக் காலத்தில் திருட்டு என்பது மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. வீடுகள் யாவும் கதவின்றி திறக்கப் பட்ட நிலையிலேயே இருக்குமாம். இரவு நேரங்களில் கூட, விலையுயர்ந்த பொருட்களை மக்கள் தைரியமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு நாட்டில் சுதந்திரம் இருந்தது. 

கலாச்சாரம்:

   அக்காலத்து பெண்களைப் பொறுத்தவரை ஒழுக்கநெறி மற்றும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்துள்ளனர். தங்களின் கணவர்களுக்கு தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளனர். கணவர் தவறுதலாக இறந்து விட்டால் மனைவியும் அவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டது. அதாவது கணவன் இறந்து விட்டால் மனைவி தன்னைத்தானே தீயிலிட்டு எரித்துக் கொள்வாள்.

   கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவர்களை சுற்றி ஒரு வட்டம் போட்டால், கடன் வாங்கியவர்கள்  கொடுத்தவரிடம் கடனை ஏன் திருப்பித் தரவில்லை என்பதற்கான காரணத்தை கூறவேண்டும் என்பது ஒரு வழிமுறை. அந்த வழிமுறையை யாரும் அன்று மீறியதில்லை என்றும் கூறப்படுகிறது.

வணிகம்:

  அக்கால வணிகத்தில் கடல் சார்ந்தே பொருட்கள் அனைத்தும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான குதிரைகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் நம் தமிழகத்தில் குதிரை பராமரிப்பு என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. 3000 குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டால் கப்பல் தமிழகத்தை வந்தடையும் போது 500 குதிரைகளே உயிருடன் மிஞ்சும் என்று கூறுகின்றனர்.

   இதற்கான காரணம் கேட்டபோது, மேலை நாடுகளில் குதிரையுடன் சேர்த்து குதிரை மருத்துவர்களையும் அனுப்பத் தவறிவிடுகின்றனர். அவ்வாறு செய்வதால் போதிய பராமரிப்பின்றி குதிரைகள் விரைவில் இறந்து விடுகின்றன. இந்தக் காரணத்தைக் கொண்டு மேலை நாட்டவர்கள், மேலும் பல போர்க் குதிரைகளை இங்கு இறக்குமதி செய்து வியாபாரத்தை பெருக்குவதாக கூறுகின்றனர்.

முத்துக் குளித்தல்:

    இந்த உலகிலேயே மிக அரிதான மரகதக் கற்கள் மற்றும் விலையுயர்ந்த முத்துக்கள் தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய இரு பகுதிகளில் தான் பரவலாக கிடைக்கும். எனவே நம் தமிழகத்தில் முத்து எடுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. நம் தமிழ் மக்கள் கடலில் முத்து எடுக்க செல்லும் போது, அவர்கள் எந்த கடல் மிருகங்களாலும் தாக்க படாமலிருக்க நிலத்திலிருந்து முனிவர்கள் மற்றும் ரிஷிகள் யாகம் மேற்கொள்வர்.

  நான் முன்னரே கூறியது போல மரகதக் கல் என்பது அவ்வளவு எளிதாக எந்த நாட்டிலும் கிடைக்காது. அவ்வளவு மதிப்புடைய அந்த மரகதக் கற்களை நம் தமிழர்கள் எவ்வாறு கடலில் இருந்து எடுத்தனர் என்பதைப் பற்றிக் காண்போம். முதலில் ரத்தம் தடவப்பட்ட இறைச்சியை மரகதக் கற்கள் கடலில் எங்கு கிடைக்குமோ, அந்த இடத்தை நோக்கி எறிந்து விடுவர். அவ்வாறு எறியப்பட்ட இறைச்சி, மரகதக் கல்லின் அருகே செல்லும்போது இயல்பாக அதன் மீது ஒட்டிக் கொள்ளும்.

   பின் சிறிது நேரம் கழித்து உண்பதற்காக, கழுகு அந்த இறைச்சியை கவ்விக்கொண்டு பறக்கும்போது, அதைப் பின் தொடர்ந்து சென்று அதன் கூட்டிலிருந்து அந்தக் கல்லை எடுத்து விடுவராம். சில சமயத்தில் கழுகு இறைச்சியை கவ்வும் போதே மரகதக் கல் நிலத்தில் விழுந்து விடும் என்று கூறுகின்றனர்.

  மேலும், இந்தப் புத்தகத்தில் தமிழர்கள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. அந்தக் குறிப்புகளைப் பற்றி நாம் அடுத்த பதிவில் விரிவாக காணலாம்.

  எனது இப்பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும். மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

                                       நன்றி!
 

   

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்