புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி? பாகம்-2
கருத்துக்களை அடிக்கோடிடுங்கள்:
நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகத்தின் சிறப்பான மற்றும் மறக்கக்கூடாத கருத்துக்களையோ அல்லது வரிகளையோ அடிக்கோடிட கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான காரணம், ஒரு புத்தகத்தை முழுமையாக படித்த பின்பு, ஏதேனும் ஒரு சூழலில் நீங்கள் அந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்ட விஷயங்களை நினைவுகூற முற்படுவீர்கள். அந்த சமயத்தில் மீண்டும் அந்த புத்தகத்தை புரட்டும்போது, நீங்கள் அடிக்கோடிட்ட அந்த வரிகள் மொத்த கருத்துக்களையும் எளிதில் உங்களுக்கு நினைவூட்டி விடும். உங்களுக்கு எந்த கருத்துக்கள் மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறதோ அவற்றை மட்டுமே அடிக்கோடு இடுங்கள்.
படித்தவற்றை செயல்படுத்துங்கள்:
நீங்கள் ஒரு புத்தகத்தை முழுமையாக படித்த பின்பு, அதிலிருந்த ஒரு சில கருத்துக்கள் உங்களை மிகவும் நெகிழச் செய்திருக்கலாம். அதுபோன்ற விஷயங்களை உங்கள் வாழ்நாளில் நீங்கள் செயல்படுத்தி பலன் காண்பது அவசியமான ஒன்றாகும். எடுத்துக்காட்டிற்கு, நான் 48 அதிகார விதிகள் என்னும் புத்தகத்தில் இருந்த ஒரு முக்கியமான விதியை என் வாழ்வில் செயல்படுத்தி இருக்கிறேன். அந்த விதியானது, "தலைவனது கர்வத்தை தாக்காதே" என்று வலியுறுத்துகிறது.
இந்த விதியை நான் படித்த பின்பு, என்னுடைய மேலதிகாரி அல்லது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யாரிடமும் அவர்களை காட்டிலும் அறிவாளியாக என்னை நானே காட்டிக் கொள்வதை தவிர்க்கத் தொடங்கினேன். அந்த விதிகள் பற்றிய பதிவை நீங்கள் படிக்க விரும்பினால் இந்த சுட்டியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
https://diviyathamizh.blogspot.com/2020/08/48-3.html
இதைப் போல புத்தகத்தில் நீங்கள் விரும்பிய ஒரு சில கருத்துக்களை வாழ்வில் செயல்படுத்தி பயன் பெறுங்கள். அப்போதுதான், இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்து நம் வாழ்வில் நமக்கு உதவியிருக்கிறது என்ற ஒரு மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் புத்தகம் படிப்பதை விரும்பத் தொடங்குவீர்கள்.
நிலைத்தன்மையை கடைபிடியுங்கள்:
எல்லாம் சரி, ஆனால் எனக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்று தோன்றவே இல்லை என்று பலரும் சிந்திப்பீர்கள். இதற்கான காரணம், அதை நாம் ஒரு பழக்கமாக மாற்ற முயற்சிக்கவில்லை. நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் தேநீர் அருந்துவது எவ்வாறு உங்கள் பழக்கம் என்று கூறுகிறீர்களோ, அதைப்போலவே புத்தகம் படிப்பதையும் உங்கள் பழக்கமாக மாற்ற வேண்டும். அது ஒன்றும் பெரிய மலையேறும் வித்தை அல்ல.
தினசரி ஒரு புத்தகத்திலிருந்து நீங்கள் ஒரு பக்கத்தை நிலைத் தன்மையோடு (consistency) நாள் தவறாமல் படித்தாலே போதுமானது. ஒரு 40 அல்லது 60 நாட்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புத்தகம் படிப்பது உங்களது ஒரு அன்றாட பழக்கமாகவே மாறிவிடும். அதன்பின் இயல்பாகவே நீங்கள் புத்தகம் படிப்பதை விரும்பத் தொடங்குவீர்கள். இதற்கு மிகவும் அவசியமான ஒன்று நிலைத்தன்மை தான்.
(எ-டு): கோபி பிரையன்ட் என்னும் கூடைப்பந்து வீரர் தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி போட்டியை முடித்த பின்பு, அவரை நேர்காணலுக்கு அழைத்தனர். அதில் ஒருவர், "உங்களுடைய கடைசி போட்டி முடிந்து விட்டது நாளை காலை எழுந்தவுடன் நீங்கள் செய்யப் போகும் முதல் செயல் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். அதற்குக் கோபி, நான் காலை எழுந்தவுடன் முதலில் உடற்பயிற்சி செய்வேன், பின் தொழில் சார்ந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி விடுவேன் என்று பதிலளித்தார். இதன் மூலம் அவருக்கு உடற்பயிற்சி செய்வது மற்றும் புத்தகம் படிப்பது என்பது ஒரு இயல்பான பழக்கம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எனது இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! எனது புத்தகம் சார்ந்த முந்தைய பதிவை நீங்கள் படிக்க விரும்பினால் இந்தக் கீழ்க்காணும் சுட்டியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
https://diviyathamizh.blogspot.com/2020/09/blog-post_19.html
நன்றி!
Super
பதிலளிநீக்கு👏👍