புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி?

  புத்தகம் என்பது நம் வாழ்வையே திசை திருப்பும் அளவிலான ஆற்றலைக் கொண்டது. இவ்வுலகில் மிகுந்த செல்வாக்கும், புகழும் பெற்று வாழ்ந்து வரும் தொழிலதிபர்கள் பலரும் தங்களுடைய வெற்றிக்கான ரகசியமாக புத்தகம் படிக்கும் பழக்கத்தையே முதன்மையாகக் கூறுகின்றனர். 

  தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு உடலுக்கு வலுவை சேர்க்கிறேதோ, அதுபோல தினமும் புத்தகம் படிப்பது மூளைக்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்தப் பதிவில் நாம் எவ்வாறு ஒரு புத்தகத்தை முறையாக படிக்க வேண்டும் என்பது பற்றியும், அந்தப் புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி என்பதையும் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!


படிக்கும் முறை:

   புத்தகத்தில் பல வகைகள் உள்ளன. ஒரு எடுத்துக்காட்டுக்கு பார்த்தோம் என்றால் சுய மேம்பாட்டுப் புத்தகங்கள், சரித்திர நாவல்கள், கற்பனைக் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றில் நாம் தேர்வு செய்யும் வகையைப் பொறுத்து நம்முடைய படிக்கும் விதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். 

(எ-டு): நீங்கள் ஒரு சுய மேம்பாட்டுப் புத்தகத்தை படிப்பதாக இருந்தால், அதில் நீங்கள் ஒரு பக்கத்தை கூட தவற விடாமல் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


  ஏனென்றால், பொதுவாக எந்த சுய மேம்பாடு சார்ந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டாலும், அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆழமான கருத்துக்கள் கூறப்பட்டு இருக்கும். அந்தக் கருத்தை நம் மனதில் நன்றாக பதியச் செய்வதற்காக பல எடுத்துக்காட்டுகளை ஆசிரியர் எடுத்துரைப்பார். நாம் அந்த அனைத்து எடுத்துக்காட்டுகளையும் படித்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டிவிடும்.

  புத்தகத்தின் ஒவ்வொரு பாகத்திலும், ஓரிரு எடுத்துக்காட்டுகளை படித்தாலே, ஆசிரியர் என்ன கருத்தைக் கூற முற்படுகிறார் என்பது நமக்கு விரைவில் புரிந்துவிடும். இதுவே நீங்கள் சுயசரிதை அல்லது பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதாக இருந்தால், ஒரு பக்கத்தைக் கூட தவறவிடாமல் ஆழமாகப் படிக்க வேண்டும். 


புத்தக முன்னோட்டம்:

    ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிக்கத் தொடங்கும் முன், அதைப் பற்றிய ஒரு மேலோட்டமான விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. அதாவது அந்தப் புத்தகத்தைப் பற்றி மக்கள் எவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்கள்? இதை எழுதிய ஆசிரியரின் அனுபவ அறிவு என்ன? அவர் இந்த புத்தகத்தைப் பற்றி பேட்டிகள் மற்றும் மேடைகளில் எவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்? என்பதை எல்லாம் ஒரு முன்னோட்டமாக நீங்கள் ஆராய வேண்டும்.

  அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு அந்தப் புத்தகம் எதைப் பற்றியது? இதில் நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் அடங்கியுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதன் மீதான கண்ணோட்டமும் மாறத் தொடங்கும். 

  சுருக்கமாக கூறினால், அந்தப் புத்தகத்தை படிக்க உங்களுடைய மூளையை நீங்கள் தயார் செய்யும் வேலையாகவே இந்த வழிமுறை அமைகிறது. "ஓர் மரத்தினை வெட்ட நான்கு மணி நேரம் கொடுத்தால், முதல் இரண்டு மணி நேரத்தில் கோடாரியை கூர்மையாக்க செயல்படுவேன்" என்னும் ஆபிரகாம் லிங்கனின் கூற்று இதற்கு உகந்த எடுத்துக்காட்டாகும்.


சிறிய இலக்குடன் தொடங்குங்கள்:

     ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த பிறகு, அதை எவ்வாறு தொடங்க வேண்டும் என்று பலரும் சிந்திப்பதில்லை. எடுத்தவுடன், ஐம்பது முதல் அறுபது பக்கங்களை படிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்குடன் தொடங்குகின்றனர். அவ்வாறு தொடங்குவது ஒரு வகையில் நல்ல இலக்காக இருந்தால் கூட, ஆரம்பத்தில் ஐம்பது பக்கங்களை படிப்பது என்பது சற்று கடினமானதாகும்.  மேலும் நீங்கள் நிர்ணயித்த அந்த மிகப்பெரிய இலக்கை அடையவில்லை என்றால் அடுத்த கணமே உங்களது உற்சாகம் குறைந்து விடும். 


  எனவே, ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்துப் பக்கங்களை படிக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன் தொடங்குங்கள். அப்போதுதான் ஒரு பத்து பக்கங்களை கடந்த பிறகு அந்த புத்தகம் உங்களுக்கு பிடித்து இருக்கிறதா என்பதற்கு ஏற்றவாறு உங்களுடைய ஆர்வமும் பெருகத் தொடங்கும். பின் மெதுவாக பத்து பக்கங்களை இருபது, முப்பது என்று பெருக்கிக் கொண்டே செல்லுங்கள். இந்த வழிமுறை புதிதாக புத்தகம் படிக்க விரும்பும் வாசகர்களுக்கே பொருந்தும். 

  

என்னுடைய புத்தகம் பற்றிய மற்றொரு பதிவை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள👇 சுட்டியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 https://diviyathamizh.blogspot.com/2020/07/blog-post_20.html

   என்னுடைய இப்பதிவை படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.

                                        நன்றி!

 

 





 

 



  

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்