"48 அதிகார விதிகள்" பாகம்-3
நான் என்னுடைய கடந்த சில பதிவுகளில், "ராபர்ட் கிரீன்" எழுதிய "48 அதிகார விதிகள்" என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 48 விதிகளில் 6 விதிகளை, இரண்டுப் பதிவுகளாகப் பிரித்துப் பதிவிட்டிருந்தேன். அந்த இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, இந்தப் பதிவில் மேலும் சிறந்த விதிகள் மூன்றனைப் பதிவு செய்துள்ளேன். அந்த மூன்று விதிகளைப் பற்றி இந்தப் பதிவில் காண ஆர்வமாக உள்ளீர்களா?? உங்கள் ஆர்வத்தை இந்தப் பதிவு நிச்சயமாக பூர்த்தி செய்யும். வாருங்கள் பதிவினுள்ளே செல்வோம்!
மேய்ப்பவரை அடித்தால் மந்தை கலையும்:
நம் வாழ்வில் பல தருணங்களில், நபர்கள் ஒரு கூட்டமாக ஒருங்கிணைந்து நம்மை வீழ்த்த முயற்சிப்பது உண்டு. அதுபோன்ற சமயங்களில் நாம் நம்மை காத்துக் கொள்வதற்காக, அந்தக் கூட்டத்தையே வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், அது சிறந்த வழி அல்ல. அதற்கு மாறாக, அந்தக் கூட்டத்தை இயக்குபவன் யார்? எனக் கண்டறிந்து அவனை வீழ்த்துவதே சிறந்ததாகும். அவனை வீழ்த்தினாலே மீதம் உள்ள நபர்கள் சரியான வழிகாட்டி இல்லாத காரணத்தால் பிரிந்து விடுவர். (விதி-42)
(எ-டு): பல நபர்கள் ஒன்றிணைந்து ஒரு புரட்சியை மேற்கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்களை மொத்தமாக செயலிழக்கச் செய்ய அந்தக் கூட்டம் உருவாகக் காரணமாயிருந்த அந்தக் குறிப்பிட்ட நபரைத் தாக்கும் போது அந்தக் கூட்டம் எளிதாக வலிமை இழந்து விடும்.
தலைவனின் கர்வத்தை சீண்டாதே:
இந்த விதி கூறுவதாவது, எப்போதும் உங்களை ஆளுகின்ற அல்லது உங்களை அதிகாரம் செய்கின்ற தலைவனோ அல்லது மேலாளரிடமோ, அவர்களைக் காட்டிலும் நீங்கள் பலம் மற்றும் திறமை மிக்கவர் என்பதை காட்டிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அவ்வாறு நீங்கள் காட்ட முயற்சித்தால், அந்தத் தலைவனின் மனதில் நம்மை வீழ்த்தி இவன் நம் இடத்தை பிடித்து விடுவானோ என்ற பயம் ஏற்படும். மேலும் மிகுந்த கர்வம் ஏற்படும். அப்போது அவர்கள் உங்களைக் கண்காணிக்க தொடங்கி விடுவார்கள். நீங்கள் முன்னேறுவது போல் தோன்றினால் அதைத் தடுக்க முயற்சிப்பார்கள். உங்களை அடுத்த இடத்திற்கு செல்ல அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார்கள். எனவே, எப்போதும் அவர்களைக் காட்டிலும் சற்றுத் திறமை குறைந்தவராகவே உங்களைக் காட்டிக் கொள்வது சிறந்தது. (விதி-1)
எப்போதும் மற்றவர்களை உங்களிடம் வர வைக்கவும்:
நீங்கள் உங்களுடைய எதிரியோ அல்லது போட்டியாளர்களின் மத்தியில் பலம் மிக்கவர் என்று தோன்ற விரும்பினால், எந்த சூழலிலும் நீங்கள் அவர்களிடம் செல்வதற்கு பதிலாக அவர்களை உங்களிடம் வரச் செய்யுங்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மாவீரர் புரூஸ் லீயை எடுத்துக் கொள்வோம். அவர் கூறுவதாவது, எப்போதும் "நாம் போட்டியாளர்களுடன் சண்டையிடும் போது முதலடியை நாம் எடுப்பதைக் காட்டிலும், நம் எதிரியை எடுக்கச் செய்ய வேண்டும்" என்று கூறுகிறார். இதற்கு மேலும் சிறந்த எடுத்துக்காட்டு "சதுரங்க ஆட்டம்". அந்த ஆட்டத்தில் முதல் நகர்வை உங்கள் எதிரிக்குக் கொடுத்தால் எளிதில் அவருடைய ஆரம்ப யுக்தியை கண்டறிந்துவிடலாம். அதற்கேற்றவாறு உங்களுடைய அடுத்த நகர்வுகளை நீங்கள் கூர்மையாக மேற்கொள்ளலாம். (விதி-8)
எனது இப்பதிவைப் படித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே! இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் உங்களது கருத்துக்களை பதிவிடவும். மேலும் ஒரு சிறந்தப் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.
நான் முன்னரே பதிவிட்ட இரண்டாம் பாகத்தை காண விரும்பினால் கீழே உள்ள👇 சுட்டியை பயன்படுத்தி படித்துப் பயன்பெறுங்கள்.
https://diviyathamizh.blogspot.com/2020/07/48-2.html
நன்றி!
மிகவும் அருமையாக உள்ளது
பதிலளிநீக்கு