ஆங்கிலம் கற்க "ஓபன் டாக்"

  நான் எனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனக்குக் கிடைத்த இரண்டு மாத விடுமுறை காலத்தில், ஏதாவது உபயோகமான பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான், இந்த இரண்டு மாதகாலம் எனக்கு ஆங்கிலம் கற்க உகந்தது என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனால் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், அதை யாரிடம் பேசுவது என்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
 
  அப்போது என் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் ஆங்கில செய்தித்தாள் மற்றும் ஆங்கில சேனல்கள் பார்க்குமாறு அறிவுறுத்தினர். அவ்வாறு செய்வது ஒரு வகையில் உபயோகமாக இருந்தாலும், எந்த மொழியையும் நாம் பிறரிடம் பேசினால் மட்டுமே அதை எளிதில் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றியது. எனவே நான் ஆங்கிலம் பேசுவதற்கென்று ஏதேனும் ஆன்லைன் செயலிகள் உள்ளதா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது தான் ஒரு சிறந்த செயலியை ஒருவர் பரிந்துரை செய்தார். அந்த செயலின் பெயர்தான் ஓபன் டாக் அல்லது பட்டி டாக்.

   இந்த செயலியின் முக்கியமான சிறப்பம்சமே, மற்ற ஆங்கிலம் கற்கும் செயலிகளில் மாத கட்டணம் வசூலிப்பது போல் இதில் வசூலிப்பது இல்லை. நாம் இலவசமாக இந்த செயலியை பிறரிடம் ஆங்கிலம் பேசுவதற்கு உபயோகித்துக் கொள்ளலாம். 

இந்த செயலியை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்தவுடன் முதலில் இந்தப்பக்கம் உங்களுக்கு காண்பிக்கப்படும்.👇 

  இதில் நீங்கள் முகநூல் மூலமாகவோ அல்லது உங்களுடைய தொலைபேசி எண்ணின் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் உங்கள்  தொலைபேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த என்னை உபயோகித்து செயலின் உள் நுழையலாம். 

  உள்நுழைந்த பிறகு உங்களுடைய பெயர், பாலினம் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எந்த மொழியைக் கற்க நினைக்கிறீர்களோ அந்த மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த செயலியில் நீங்கள் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

   அதன்பின் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஒரு பக்கம் தோன்றும்.

   இப்பொழுது நீங்கள் "டாக் நவ்" என்ற  பொத்தானை அழுத்தினால் இந்த செயலியை உபயோகிக்கும் யாரேனும் ஒருவருடன் நீங்கள் தொடர்பில் இணைந்து விடுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் அந்த நபருடன் பேசத் தொடங்கலாம். நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் நபர் வேறு நாடாகவும் அல்லது உங்கள் நாட்டிலேயே வேறு மாநிலத்தவராகவும் இருக்கலாம்.

  அந்த நபருடன் பேசிய பிறகு அவர் உங்களுக்கு நம்பகமானவர் என்று தோன்றினால் அவரை நீங்கள் உங்கள் நண்பராகவும் மாற்றிக் கொள்ளும் வகையில் பல வசதிகள் இந்த செயலியில் உள்ளது. நண்பராக ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பமே.

  மேலும் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் யாருடனும் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. உங்களுடைய தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற எவற்றையும் இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதைத் தவிர மற்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் அந்த நபருடன் பேசலாம்.

  இந்த செயலியை உங்களைப் போன்று ஆங்கிலமே தெரியாத பலரும் பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் முதன்முதலாக ஒருவரிடம் பேசும்போது கூச்சமோ அல்லது என்ன பேசுவது என்று தெரியாமல் பதட்டமோ கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

மேலும் நீங்கள் எத்தனை நபருடன் பேசி இருக்கிறீர்கள், எவ்வளவு மணி நேரம் பேசி இருக்கிறீர்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இந்த செயலி உங்களுக்கு காண்பிக்கும். உங்களிடம் பேசும் நபர் ஏதேனும் தவறாக பேசுகிறார் என்று தெரிந்தால் உடனே இணைப்பை துண்டித்து விட்டு புகார் அளிக்கவும், இதில் வசதிகள் உள்ளன. 

  நான் இந்தச் செயலியை மூன்று மாதத்திற்கும் மேல் உபயோகித்து இருக்கிறேன். அதில் நான் கண்ட இரண்டு முக்கியமான பின்னடைவுகள் என்னவென்றால், சில சமயம் நீங்கள் சரளமாக பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று எதிரே பேசும் நபரின் குரல் தெளிவாக இருக்காது. உடனே இணைப்பை நீங்கள் துண்டிக்க நேரிடும். எனவே வலைப்பின்னல் இணைப்பு (network connection)நன்றாக கிடைக்கும் இடத்தில் அமர்ந்து பேசுவது சிறந்தது. இரண்டாவதாக எல்லா சமயங்களிலும் எல்லா நபர்களும் நம்முடன் நன்றாகவே பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பல நபர்கள் மிகவும் நட்புறவோடு பேசுவது உண்டு. ஆனால் சிலர் மட்டுமே தவறாக பேசுவதும், நம்மை கேலி செய்வதுமாக நடந்து கொள்வர். அந்த நபர் பேசுவது நமக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே இணைப்பை துண்டித்து விட்டு நாம் மீண்டும் டாக் நவ் கொடுத்தால் வேறு நபருடன் இந்த செயலி நம்மை இணைத்து விடும்.

நான் இந்த செயலியை உபயோகிக்க தொடங்கிய பின் எனது ஆங்கில மொழித்திறன் நன்றாக மேம்படத் துவங்கியது. எனவே தான் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். எனவே நண்பர்களே! இந்த செயலியை நீங்கள் எவ்வளவு நல்விதத்தில் உபயோகிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு உங்கள் மொழித் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

  நீங்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.opentalk

  இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால், கீழே உள்ள கருத்துப் பெட்டியில் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள். மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன் தோழர்களே!

                                     நன்றி!

பின்குறிப்பு: மேற்கூறப்பட்டுள்ள இந்த செயலிக்கும் இந்த வலைப்பதிவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட தொடர்பும், வியாபார நோக்கமும் இல்லை. இவையாவும் என்னுடைய சுய அனுபவத்தின் மூலம் கூறப்பட்ட கருத்துக்களே!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்