பொறுமையே பெருமை

   இந்தப் பதிவில் நாம் பதற்றம் என்ற மாபெரும் எதிரியை தன் பொறுமையால் வென்று விதியை மாற்றிய ஒரு மானின் கதையை பற்றிக் காண்போம். இந்தக் கதை ஒரு முறை என்னுடைய கல்லூரி வகுப்பு ஆசிரியர் என்னிடம் கூறிய அற்புதமான கதையாகும்.
  
  அந்தப் பொன் மாலை நேரத்தில், அடர்ந்த வனக்காட்டில் கலைமானும் அதன் குட்டியும் வடக்கு திசையில் உள்ள ஒரு நதியின் அருகே புற்களை நன்கு புசித்துக் கொண்டிருந்தன. வானமும் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால், மழைக்கான வாய்ப்பு முழுமையாகத் தென்பட்டது. அப்போது தெற்கு திசை வழியே இறைத் தேடி வந்த காட்டுச்சிங்கம் ஆனது, அந்த மான்களை பார்த்ததும் புதர்களின் நடுவே சப்தமின்றி பதுங்கிக் கொண்டது. அதே நேரத்தில் தற்செயலாக அவ்வழியே சென்று கொண்டிருந்த வேடன் ஒருவனும், அந்த இரு மான்களையும் பார்த்துவிட்டான்.


 
    சிங்கம் பதுங்கி இருந்ததை பார்க்காத வேடன், அம்பு எய்வதற்கு தகுந்தாற் போல் கிழக்கு திசையில் உள்ள ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான். சிறிது நேரத்திற்குப் பின், இரு திசைகளிலும் தனக்கு நிகழவிருக்கும் ஆபத்தை உணர்ந்த தாய் மான், மேற்கு திசை வழியே தப்பிவிடலாம் என்று யோசித்தது. ஆனால் வடக்கில் இருந்து மேற்கு திசை முழுவதும் பாய்ந்து கொண்டிருந்த நதி அதற்கு இடமளிக்கவில்லை. எதையும் உணராத கலைமானின் குட்டியானது புற்களை மேய்வதில் கவனமாக இருந்தது. தப்பி செல்ல எவ்வழியும் இல்லை என்பதை தாய் மான் உணர்ந்தும், சற்றும் பதற்றம் அடையாமல், பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதன் குட்டியுடன் சேர்ந்து புற்களை மேய்ந்தது. இந்த சூழலில் அந்த இரு மான்களும் எப்படி தப்பித்து இருக்கும் என்று சிந்தியுங்கள் நண்பர்களே! 

   இறுதியில் சிங்கமானது மான்களை நோக்கி வேகமாகப் பாய, வேடனும் அம்பு எய்தும் அந்த நொடிப்பொழுதில் திடீரென ஒரு பலத்த இடி இடித்தது. அந்த பலத்த இடியின் சப்தத்தை கேட்ட வேடன் சற்று பதற்றமடைந்ததால், குறி தவறி அம்பை சிங்கத்தின் மீது பாய்ச்சி விட்டான். அம்பும் சிங்கத்தின் உடலில் சீறிப் பாய்ந்து, சிங்கத்தை வீழ்த்தியது. தன் பொறுமைக்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக் கொண்ட இரு மான்களும் சிங்கம் வந்த தெற்கு திசை வழியே தப்பிச் சென்றது. 
            
            "பொறுமையே பெருமை".

  அந்தக் கலை மானைப் போல் நாமும் எந்த இருக்கமான சூழலையும் பதற்றமடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டால் நிச்சயம் அதிலிருந்து வெளிவர ஒரு வழி கிடைக்கும் என்பதே இந்தக் கதையின் மையக் கருத்தாகும். என் பதிவைப்  படித்தமைக்க மிக்க நன்றி நண்பர்களே! மீண்டும் ஒரு சிறந்த பதிவுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
   
                                நன்றி!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மார்க்கோபோலோவின் தமிழ்ப் பயணக் குறிப்புகள்

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

சிதம்பர நடராஜர் கோவில் இரகசியம்